IMF 7ஆவது மதிப்பாய்வு: இலங்கைக்கு 345 மில்லியன் டொலர் நிதியுதவி எதிர்பார்ப்பு - Global Tamil Voice உலக தமிழ் குரல்

IMF 7ஆவது மதிப்பாய்வு: இலங்கைக்கு 345 மில்லியன் டொலர் நிதியுதவி எதிர்பார்ப்பு

 



சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுத்து வரும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு, IMF பணியாளர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டுக்கு IMF நிறைவேற்று சபை ஒப்புதல் வழங்கிய பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த நிதியுதவி சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும்.

எவ்வாறாயினும், IMF நிறைவேற்று சபையின் இறுதி ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னர், 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டை உரிய நிதி அளவுருக்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை நிறைவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என IMF தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக IMF-இன் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பபர்ஜியோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், ஓகஸ்ட் மாத இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 8 சதவீதமாக இருந்ததுடன், நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாக IMF சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்தத்தின் கால அளவு மற்றும் தீவிரம், உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எல் நினோ காலநிலைத் தாக்கம் உள்ளிட்ட காரணிகளால் இலங்கை பொருளாதாரத்திற்கு தொடர்ந்து ஆபத்துகள் காணப்படுவதாக IMF எச்சரித்துள்ளது.

இதனிடையே, உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளை சீரமைத்தல், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட நிவாரணங்களை வழங்குதல், மத்திய கால வருமான உத்திகளை உருவாக்குதல், விநியோகத் துறையில் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்தல் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்திப் பேணுதல் உள்ளிட்ட பரிந்துரைகளையும் IMF முன்வைத்துள்ளது.

About GTV